இஎம்யூ சிறப்பு ரயிலில் ரோந்து செல்லும் ரயில்வே போலீசார்

புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் போலீசார் ரோந்து செல்லும் வகையில் இஎம்யூ சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஐஜி வனிதா, டிஐஜி ஜெயகவுரி மற்றும் எஸ்பி ராஜன் மேற்பார்வையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக ஊட்டி ரயில் நிலையம் வரையும் ரயில்வே போலீசார் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை கொருக்குபேட்டை மார்க்கமாக கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வரையும் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரையிலும் னைத்து இடங்களிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 டிஎஸ்பிக்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 75 எஸ்ஐக்கள், 560 காவலர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள் என மொத்தம் 750 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில்வே துப்பறியும் மோப்ப நாய் பிரிவு படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ரயில் நிலையங்களில் சோதனை நடத்தினர்.

மேலும் டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டதற்கிணங்க இதுவரை இல்லாத வகையில் முதல் முதலாக குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 3 இம்யூ பீட் சிறப்பு ரயில்களில் ரோந்து அலுவல் செய்யும்முறை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலும், சென்ட்ரல் முதல் திருத்தனி ரயில் நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலும் இந்த ரோந்து அலுவலை ரயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு முடியும் தருவாயில் எந்த ஒரு அசம்பாவிதமோ, உயிர் சேதமோ ஏற்படாமல் மிக சிறப்பாக முறையில் தமிழக ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்த ரோந்துப் பணியை மேற்கொண்டனர். ரயில்களில் அமர்ந்து ரயில்வே காவலர்கள் ரோந்து பணி செல்வது வழக்கம், ஆனால் இந்த புத்தாண்டு ரயில்களே ரோந்து வாகனம் போன்று பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும். இந்த ரோந்துப் பணி பொங்கல் அன்றும் கடைபிடிக்க ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!