அரசுப்பணியாளர் தேர்வாணையம் பேரில் போலி நியமன ஆணை தயாரித்து வழங்கி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட இருவரை சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை நகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணைக்கமிஷனர் கண்ணம்மாள் மேற்பார்வையில் சென்னை மத்தியக்குற்றப்பிரிவு மரபுசாரா குற்ற விசாரணை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சென்னை, புளியந்தோப்பு, ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரராவ் (வயது 54), அவரது நண்பர் தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ஞானசேகர் (வயது 43) ஆகிய இருவரும் சேர்ந்து போலி நியமன ஆணையை தயார் செய்தது தெரியவந்தது. இருவரும் சென்னை செம்பியத்தைச் சேர்ந்த பத்மாவதி, சாஹிரா ஆகியோர்களிடம் டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 6 லட்சம் பணம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை தயாரித்து இருவருக்கும் வழங்கியுள்ளது போன்ற அதிர்ச்சித்தகவல்கள் தெரியவந்தன. மேலும் நாகேந்திரராவ், ஞானசேகர் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பல நபர்களிடம் நம்பிக்கை மோசடி செய்து பணம் பெற்றது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.