42 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி

உடல் உறுப்பு தானம் மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வூட்டும் வகையில் தமிழக லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி 5 மணி நேரத்தில் 42 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் ஓடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு இயக்குநராக இருப்பவர் ஏடிஜிபி ஜெயந்த் முரளி. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புப்பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஜெயந்த்முரளி கடந்த ஆண்டு பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி வாயில் துணியைக்கட்டி மூக்கால் மட்டுமே மூச்சு விட்டு நீண்ட துாரம் மாரத்தான் ஓட்டம் ஓடி சாதனை நிகழ்த்தினார்.

இந்நிலையில் ஜெயந்த் முரளி மீண்டும் நீண்ட துாரம் விழிப்புணர்வு மாரத்தான் ஓடி சாதனை புரிந்துள்ளார். தமிழகத்தில் லஞ்ச ஊழல் ஒழிப்பு மற்றும் உடல் உறுப்புக்களை தானம் செய்வது மற்றும் ஊழல் இல்லாத நேர்மையான வாழ்க்கை முறை ஆகியவற்றை வலியுறுத்தி ஜெயந்த் முரளி இந்த ஓட்டத்தை நடத்தி முடித்துள்ளார். அதற்காக சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தயம் நடக்கும் மைதானத்தில் இன்று அதிகாலை 4,30 மணிக்கு தொடங்கி சுமார் 42.2 கிலோ மீட்டர் துாரத்தை 5 மணி நேரத்தில் ஓடி முடித்தார். இதற்கான ஏற்பாடுகளை ‘சென்னை ரன்னர்ஸ் ஸ்கெச்சர்ஸ் பெர்பாமன்ஸ் மாரத்தான் 2021’ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஓட்டப்பந்தயத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி உள்பட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கணக்கானர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!