பணியின் போது உயிரிழந்த தலைமைக்காவலர் குடும்பத்திற்கு காவல்துறை திரட்டிய நிதி ரூ. 12.47 லட்சத்தை கமிஷனர் மகேஷ்குமார் வழங்கினார்.
சென்னை நகர காவல், நவீன கட்டுப்பாட்டறையில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் பணியிலிருந்த போது, திடீரென உடல் நலம் பாதிப்படைந்தார். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அக்டோபர் மாதம் 15ம் தேதியன்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்தார். செந்தில்குமாருக்கு சுனிதா என்ற மனைவியும், கல்லுாரியில் படிக்கும் 2 மகள்கள் உள்ளனர்.
செந்தில்குமார் கடந்த 1997ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர் ஆவார். ஏற்கனவே 3 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சுமார் ரூ. 4.5 லட்சம் செலவு செய்துள்ள நிலையில், அவருடன் பணிக்கு சேர்ந்த 1997ம் ஆண்டு 2வது பேட்ச் காவலர்கள் (தற்போது தலைமைக் காவலர்கள்) தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்து இறந்த செந்தில்குமாரின் குடும்பத்துக்கு உதவ முன் வந்தனர். அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 1997ம் ஆண்டு 2வது பேட்ச் காவலர்கள் சுமார் 2,460 நபர்கள் ஒருங்கிணைந்து செந்தில்குமாரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 400 வசூல் செய்தனர். தலைமைக் காவலர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், காவலர்கள் வசூலித்த பணம் ரூ. 12.76 லட்சத்தை இறந்த தலைமைக் காவலர் செந்தில்குமாரின் மனைவி சுனிதாவிடம் இன்று வழங்கினார். சுனிதா மற்றும் அவரது மகள்கள் காசோலையை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு காவல்துறை மற்றும் 1997ம் ஆண்டு பேட்ச் காவல் குழுவினருக்கு நன்றி கூறினர்.