சென்னை திருவான்மியூர் பகுதியில் லோடு ஆட்டோவில் 775 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவான்மியூர் பகுதியில் ஆட்டோவில் குட்கா கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில், திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் தலைமையிலான போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதனையடுத்து நேற்று மதியம் 2.30 மணியளவில் திருவான்மியூர் போஸ்ட் ஆபிஸ் அருகில் கண்காணித்த போது அங்கு வேகமாக வந்த லோடு ஆட்டோவில் குட்காவை கடத்தி வந்த சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த சாதிக் அலி (35), மறைமலை நகர் ஜாபர் அலி, செங்குன்றம் தங்கராஜ் (27) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 775 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலைப்பொருட்கள், 3 செல்போன்கள் மற்றும் 1 லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் மேற்படி குட்கா புகையிலைப் பொருட்கள் கோயம்பேட்டிலிருந்து லோடு ஆட்டோவில் செங்கல்பட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.