சாலைகளில் பிச்சை எடுத்த குழந்தைகள் 49 பேர் மீட்பு

சென்னை நகரில் சாலைகளில் பிச்சை எடுத்த மற்றும் காணாமல் போன, பொருட்கள் விற்பனை செய்யப் பயன்படுத்தப்பட்ட 49 குழந்தைகளை குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

சென்னை நகரில், பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப்பிரிவு போலீசார் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் குழந்தைகள் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காணாமல் போன குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்கவும், பிச்சையெடுக்கும் நபர்களைக் கண்காணித்து பிச்சையெடுக்கும் தொழில்கள், பொருட்கள் விற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை மீட்டு அவர்களின் மறுவாழ்விற்கு வழிவகை செய்து வருகின்றனர்.

அதன்படி சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 9 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க குழந்தைள் நல காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதனையடுத்து குழந்தை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வெங்கண குண்டா கிராமம், சி.எஸ்.புரம், பிரகாசம் தெருவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பெற்றோர் இல்லாத காரணத்தால் பாட்டியுடன் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் குழந்தைகள் நலம் கண்காணிப்பு குறித்து சிறுவர் நல காவல் பிரிவு குழுவினர் புரசைவாக்கம் பகுதியில் ரோந்து செய்து கொண்டிருந்த போது சரவணா ஸ்டோர்ஸ் அருகே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 1 குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களில் 9 ஆண்டுகள் வரை காணாமல் போன 10 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது பெற்றோர் மற்றும் உறவினரிடம் பத்திரமாக திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மேலும் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 39 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டு அவர்களின் மறுவாழ்விற்கு வழிவகை செய்யப்பட்டது. பிச்சைக்காரர்கள் மற்றும் குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவரை உரிய அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!