ரேஷன் கடை ஊழியருக்கு பலான ஆசைக்காட்டி அழைத்துச்சென்று ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற ஆட்டோவில் வந்த பலே பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, கோயம்பேடு, சாஸ்திரி நகரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருபவர் பாஸ்கர். நேற்று முன்தினம் இரவு தனது பணியை முடித்து விட்டு ரேஷன் கடையில் பொங்கலுக்காக கொடுக்க வைத்திருந்த ரூ. 8 லட்சம் பணத்தை தனது பையில் எடுத்துக்கொண்டு, அதே ரேஷன் கடையில் பணியாற்றும் தனது நண்பர் சக்திவேல் என்பவருடன் கோயம்பேட்டில் பாரில் மது அருந்தியுள்ளார். பின்னர், அரும்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு பாஸ்கரன் நடந்து சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அடையாளம் தெரியாத ஒரு பெண் பாஸ்கர் மீது இடித்துவிட்டு ஆசைவார்த்தை காட்டி பேசியுள்ளார். இதனை நம்பி பாஸ்கரன் ஆட்டோவில் ஏறி பாரிமுனையில் உள்ள தனியார் விடுதியில் உல்லாசமாக இருக்க சென்றுள்ளார். ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது குடிபோதையில் உள்ள பாஸ்கரிடம் பணம் கேட்டு பெண் மிரட்டியுள்ளார். இல்லையெனில் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூச்சலிடுவேன் என மிரடியுள்ளார்.
இதனால் பயந்து போன பாஸ்கர் பாரிமுனையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து வந்து பெண்ணிடம் கொடுத்துள்ளார். பின்பு அந்தப் பெண் பாஸ்கரை சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். பின்னர் தான் வைத்திருந்த பையை பாஸ்கர் சோதனை செய்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ. 8 லட்சம் ரூபாய் பணத்தில் 5.15 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாஸ்கர் அருகில் இருந்த வடக்கு கடற்கரை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் யார், அவர் வந்த ஆட்டோவின் பதிவெண் உள்ளிட்டவற்றை என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ. 5 லட்சம் பணம் திட்டமிட்டு வழிப்பறி செய்யப்பட்டதா அல்லது பாஸ்கரனே பணத்தை எடுத்துக் கொண்டு கொள்ளை நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கடற்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.