சென்னை திருவல்லிக்கேணியில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்குவதற்கு வசதியாக அவர்களுக்கு 2 தள்ளுவண்டிகளை துணைக்கமிஷனர் கிருஷ்ணராஜ் வழங்கினார்.
சென்னை நகரில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக வரது உத்தரவின் பேரில் நேற்று மதியம் சூளைமேடு காவல் நிலைய வளாகத்தில் திருநங்கைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்லாவரம் லயன்ஸ் கிளப் சார்பாக வழங்கப்பட்ட ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள 2 தள்ளுவண்டிகளை, திருநங்கைகள் மோகனா மற்றும் சபிதா ஆகிய இருவருக்கு வழங்கினார். இதுவரை சூளைமேடு காவல் நிலைய போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 திருநங்கைகளுக்கு சுயதொழில் புரிய 8 தள்ளுவண்டிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் லயன்ஸ் கிளப் தலைவர் அசோக், சூளைமேடு இன்ஸ்பெக்டர், காவல் ஆளினர்கள் மற்றும் திருநங்கை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.