டிஎன்பிஎஸ்சி போலி நியமன ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி போலி நியமன ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை நகல் வந்ததாகவும், அந்த போலியான நகல் தயாரித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் மரபுசார் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதனையடுத்து உதவிக்கமிஷனர் செல்வகுமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர் சென்னையைச் சேர்ந்த நாகேந்திரராவ், அவரது நண்பர் ஞானசேகர் ஆகியோர் சேர்ந்து செம்பியத்தைச் சேர்ந்த சாஹிரா, பத்மாவதி ஆகியோர்களிடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 6 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதனையடுத்து நாகேந்திரராவ், ஞானசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை மந்தவெளியைச் சேர்ந்த ரமணி (எ) வெங்கடாச்சலம் (58), பட்டாபிராமைச் சேர்ந்த தேவன் என்கிற தேவராஜ் (63) ஆகிய 2 நபர்களை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் பணம், 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைது செய்யப்பட்ட ரமணி (எ) வெங்கடாச்சலம் என்பவர் போலி பணி நியமன ஆணைகளை தயார் செய்து, தபால் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பியதும், தேவன் (எ) தேவராஜ் என்பவர் தலைமைச் செயலகத்தில் அரசு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!