மதுரை பாஜக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல்: டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு

மதுரை பாஜக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில்
புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக பாஜ மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் டிஜிபி திரிபாதியிடம் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு:–  கடந்த 9, 10 இரண்டு நாட்களில் தமிழக பாஜக., சார்பில் ‘நம்ம ஊர்ப் பொங்கல் நிகழ்ச்சிகள், பாஜக., மாநில தலைவர் எல் முருகன் சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 10ம் தேதியன்று  மதுரை புறநகர், திருப்பாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முருகன் கலந்து கொண்டார்.

அதற்கு எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிராண்ட், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளைச்
சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தலைமுறை காலம் மாறும்” என்று பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கோஷங்களை எழுப்பி சமூக ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி பிரிவினை கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி முடிந்து, திரும்ப சென்ற போது பா.ஜ நிர்வாகிகள் சென்ற இரண்டு வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தினர். நிகழ்ச்சி முடிந்து மதுரை புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கு மாவட்ட தலைவர், அவரது டிரைவர், அலுவலக உதவியாளர் பாண்டியம்மாள் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் மாலை 3.30 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்பட மூவரையும் தாக்க முயற்சித்துள்ளனர். சுதாரித்துக்கொண்டு உட்புற கிரில் கேட்டை சாத்திய பிறகும் உள்ளே கைகளை விட்டு அரிவாள் கொண்டு தாக்க முயற்சித்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக மூவரும் உயிர் தப்பியுள்ளனர். அது தொடர்பாக சிசிடிவி கேமரா ஆதாரங்களும் உள்ளன. அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!