யாரும் கவனிப்பாரற்ற நிலையில் ஆதரவு தேடி காவல் நிலையம் வந்த 88 வயது முதியவருக்கு உதவிக்கரம் நீட்டிய மனிதநேய சட்டம், ஒழுங்கு பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். 88 வயது முதியவரான இவர் நெல்லையைச் சேர்ந்தவர். 26 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி நாகரத்தினம்மாள் இறந்து விட்டார். நான்கு பிள்ளைகள் உள்ளனர். நான்கு பிள்ளைகளும் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்க கூடாது என்று கருதிய பாண்டியன் தனியாகவே 2 வருடம் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரனாா லாக்டவுன் சமயத்தில் பணமின்மையால் வறுமையில் வாடியுள்ளார். வயதான நிலையில் தன்னை கவனித்து கொள்ள யாரும் இல்லை தங்குவதற்கும், உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனைக் கண்ட பாண்டியனின் நண்பர் செகரேட்டரியேட் காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரியை போய் சந்தியுங்கள். உங்களுக்கு நல்லது நடக்கும் என்று ஒரு வெள்ளை பேப்பரில் போலீஸ் நிலையத்தின் முகவரியை எழுதிக் கொடுத்து அனுப்பியுள்ளார். அதனையடுத்து முதியவர் பாண்டியன் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரியை சென்று சந்தித்துள்ளார்.
பெரியவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ராஜேஷ்வரி அவரை கனிவுடன் வரவேற்று அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். அது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி கூறியதாவது: ‘‘பெரியவர் என்னை தேடி வந்து அவருடைய குறைகளை கூறினார். கேட்பதற்கு வேதனையாக இருந்தது. அவருக்கு ஆறுதல் கூறி, கவலைப்படாதீர்கள், காவல்துறை உங்களுக்கு கட்டாயம் உதவி செய்யும் என்று கூறி அமர வைத்தேன். பின்னர் எனது தலைமைக் காவலர்கள் ஸ்ரீகுமரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் பெரியவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டார். ரிசல்ட் வரும் வரை பெரியவர் தன்னார்வலர்கள் ராஜேஷ், பழனி ஆகியோர் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஷெல்டர் ஹோமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனை முடிவு வந்த பிறகு சமூக சேவகர் வெங்கடேசன் உதவியுடன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படவுள்ளார்’’ என தெரிவித்தார்.