மறைந்த பாடகர் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது தாமரைப்பாக்கம் பண்ணை இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் எஸ்பிபியின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு காவல்துறையினரின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார்நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
எஸ்பிபி உடலுக்கு தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திரைப்பட நடிகர்கள் விஜய், விக்ரம் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள், இயக்குநர்கள், பாடகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மதியம் 12.30 மணியளவில் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.