தேனி மாவட்டம் வைகை அணை; 150 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓபிஎஸ் திறப்பு

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாசன பகுதிக்காக 58 ஆம் கால்வாயிலிருந்து 150 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58 கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில்  1996 ஆம் ஆண்டு  58 கிராம கால்வாய் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டம் துவக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேலாக மேலாக செயல்படுத்தப்படாமல் இருந்து. 

இந்த 58 கிராம கால்வாய் திட்டத்தின் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல் என மூன்று மாவட்டங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் மேலும் 33 கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்படும்.  உசிலம்பட்டி பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான இத்திட்டத்தை 32 கோடி மதிப்பில் 33 கிமீ தொலைவில் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டு  2018 ஆம் ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

வைகை அணை நீர்மட்டம் 67 அடியை கடந்த பின்பு தான் 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.  2019  ஆண்டு வைகை அணை நீர்மட்டம் 67 அடியை தாண்டி இதைத் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வைகை அணை முழு கொள்ளளவான 69 அடியை கடந்ததால் 58 கிராம  கால்வாயில் இருந்து 150 கன அடி தண்ணீரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இனிவரும் நாட்களில் வைகை அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவில் மாற்றம் செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைகை அணை வலது கரை பகுதியில் அமைந்துள்ள 58 ஆம் கால்வாயின் நான்கு மதகுகளையும் திறந்து வைத்த  துணை முதல்வர் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார். இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!