8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைவு

சென்னை,

8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 18-ந்தேதி கொரோனா பாதிப்பு 600-க்கும் குறைவாக இருந்தது. அதற்கடுத்த நாட்களில் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பின் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 600-க்கு கீழ் சென்றுள்ளது.

அந்த வகையில் நேற்று 589 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 353 ஆண்கள், 236 பெண்கள் என மொத்தம் 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 164 பேரும், கோவையில் 66 பேரும், செங்கல்பட்டில் 50 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூர், அரியலூரில் தலா இருவரும், ராமநாதபுரம், தர்மபுரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி, பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 45 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 128 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 49 லட்சத்து 20 ஆயிரத்து 888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 30 ஆயிரத்து 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 161 ஆண்களும், 3 லட்சத்து 28 ஆயிரத்து 577 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 939 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 566 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 8-ந் தேதி முதல் நேற்று வரை தமிழகம் வந்த 409 பேரில், 281 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 256 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 23 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 7 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 770 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 147 பேரும், கோவையில் 88 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 568 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 940 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

 

 

Translate »
error: Content is protected !!