சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என, அவரது நண்பரே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை டிசம்பர் 14-ம் தேதி கைது செய்தனர். சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த்தை கைது செய்த நசரத்பேட்டை போலீஸார் அவரிடம் 6 நாட்கள் விசாரணை நடந்தினர். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இதனையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஹேம்நாத்தின் 10 ஆண்டு கால நண்பரான காஞ்சிபுரம் புதுப்பாக்கத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்தார். இதுகுறித்து பல முறை நான் எச்சரித்தும் கேட்காததால் அவரிடம் இருந்து விலகியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஹேம்நாத் துன்புறுத்தினார் என்றும், அனைத்து தகவல்களும் தெரிந்த என்னிடம் இதுவரை யாரும் விசாரணை நடத்தாமல் உள்ளனர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேம்நாத்தின் ஜாமீன் மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கு விசாரணை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.