‘‘குழந்தைகளை நல்வழிப்படுத்துவது நம் கடமை’’ * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேச்சு

‘‘குழந்தைகள் தவறுகள் செய்தால் அவர்களை நல்வழிப்படுத்துவது நமது கடமை’’ என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு அறிவுரை கூறி பேசினார்.

சென்னை நகரில் குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு இளஞ்சிறார் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த பயிற்சி நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் மற்றும் பெண்கள் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் இந்த பயிற்சி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று 3வது நாளாக நடந்த இந்த பயிற்சி வகுப்பில் சென்னை ஐகோர்ட் வக்கீல் ஆதிலஷ்மி போக்சோ சட்டங்களிலுள்ள தண்டனைகள், விதிமுறைகள் பற்றியும் விசாரணை நடைமுறை மற்றும் குழந்தைகளை கையாளும் விதம் குறித்தும் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரை வழிநடத்தும் முறைகள் குறித்தும் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘தவறு செய்யும் மற்ற குழந்தைகளையும் மன்னித்து நல்வழி காட்ட வேண்டும். போதிய மனப்பக்குவம் இல்லாததால்தான் குழந்தைகள் தவறுகள் செய்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வது நமது கடமை. குழந்தைகளிடம் இயந்திரத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்துவதே நமது கடமை என்பதற்காகவே குழந்தைகள் நல காவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அதன் பேரில் கடந்த மாதம் அடையாறு பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 46 இளம் சிறார்களை கண்டறிந்து அவர்களுக்கு வாழ்வாதார பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மயிலாப்பூரிலும் இதே போல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது’’ இவ்வாறு தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!