சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல்…… அதிதீவிர நுரையீரல் தொற்று – தொடர் சிகிச்சை நடந்து வருகிறது

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ஹைபோ தைராடிசம், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு (வயது 63) மூச்சுத் திணறல், மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மூச்சுத் திணறல் அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் கடந்த 20-–ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆக்சிஜன் அளவு 96 ஆக உயர்ந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

இதனிடையே, பௌரிங் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கருவி செயல்படாததால், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கே.ஆர்.சந்தை பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் சசிகலா மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன், ரத்தம், இருதய பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அங்கும் சசிகலாவுக்கு நேற்று ஆர்.டி.-பி.சி.ஆர். ட்ரூநாட் போன்ற கொரோனா சோதனைகள் மீண்டும் நடத்தப்பட்டன. அதில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று இரவு தெரிவித்தது.

சசிகலாவுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், அவரது உடல் நிலை குறித்தும் விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிதீவிர நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பாதிப்புகளும் உள்ளன. சசிகலாவை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளோம்.

சசிகலாவுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் 2 பெண் கைதிகள், அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

 

Translate »
error: Content is protected !!