இந்தியாவில் ஆறு நாட்களில் 12.7 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு, உலக அளவில் 10 வது இடமும் விரைவாக போடுவதில் 2 வது இடமும் வகிக்கிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஆறு நாட்களில் கொரோனா தொற்றுக்கு எதிராக, கிட்டத்தட்ட 12.7 லட்சம் தடுப்பூச்சிகள் போடப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் 1.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாக சீனா கூறி உள்ளது. சீன அரசாங்கத்துக்கு சொந்தமான சினோபார்ம் குழுமத்தின் தலைவர் நவம்பர் மாதத்திலேயே சீனா 10 லட்சம் தடுப்பூசிகளை அடைந்துள்ளது என கூறினார்.
உலக அளவில் வியாழக்கிழமை வரை கிட்டத்தட்ட 5. 7 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்கா 1.75 கோடி தடுப்பூசிகளுடன் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து சீனா (1.5 கோடி), இங்கிலாந்து (54 லட்சம்), இஸ்ரேல் (33 லட்சம்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (23 லட்சம்), ஜெர்மனி (14 லட்சம்), இத்தாலி (13 லட்சம்), துருக்கி (11 லட்சம்) மற்றும் ஸ்பெயின் (11 லட்சம்). இந்தியா 10 வது இடத்தில் இருந்தது.
இந்தியாவில் போடப்பட்டுள்ள 10 லட்சம் தடுப்பூசிகள் என்பது வெறும் 0.08 சதவிகிதம்தான். அதேவேளை, இஸ்ரேல் மற்ற நாடுகளை விட மிகவும் முன்னிலையில் உள்ளது. 100 குடிமக்களில் 38 பேருக்கு தடுப்பூசிகள் அங்கு வழங்கப்பட்டு உள்ளது.
அரபு எமிரேட்ஸ் இதுவரை சிறந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ளது 100 பேருக்கு 22.7 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பஹ்ரைன் (8.5), இங்கிலாந்து (8) மற்றும் அமெரிக்கா (5.3) ஆகும். தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் தாமதமாக ஆரம்பித்த போதிலும் தடுப்பூசி மிகமிக வேகமாக போடப்பட்டு வருகிறது. சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகளை விட இது வேகம் ஆகும்.