தொலைபேசி மூலம் இந்தியா–அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக ரத்து செய்து வரும் ஜோ பைடன், புதிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியா–அமெரிக்கா இடையேயான வெற்றிகரமான நீண்ட கால உறவை மதித்து வருவதாகவும், இந்திய–அமெரிக்க உறவு தொடர்வதை அவர் எதிர்பார்க்கிறார் என்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொலைபேசி மூலம் இந்தியா–அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, கொரோனா மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா – இந்தியா கூட்டமைப்புக்கான அதிபர் ஜோ பைடனின் நிலைப்பாட்டை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.