சென்னையில் இருந்து காரில் கடத்தப்பட்ட இந்திய கடற்படை மாலுமி மகாராட்டிரா காட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். அவரது உடலை மீட்டு மகாராட்டிரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் டுபே (வயது 27). இந்திய கடற்படை மாலுமியான இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் கோவையில் உள்ள இந்திய கடற்படை ‘ஐஎன்எஸ் அக்ராணி’ பயிற்சிப்பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஜனவரி 31ம் தேதியன்று இவர் விடுமுறையில் விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னைக்கு வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அன்றைய தினம் இரவு 9 மணியளவில் மாலுமி சூரஜ்குமாரை 3 அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது செல்போனை பறித்துள்ளனர்.
பின்னர் அவரை வெள்ளை நிற எஸ்யூவி காரில் கடத்திச்சென்று ரூ. 10 லட்சம் தரும்படி கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை பணயக்கைதியாக சென்னைக்கு வெளியே உள்ள மறைவான இடத்துக்குஅழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை 3 நாட்கள் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் சூரஜ்குமார் பிப்ரவரி 5ம் தேதியன்று மகாராட்டிரா மாநிலம், பால்கார் அருகே உள்ள தாலசாரி, வேவ்ஜி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பிப்ரவரி 5ம் தேதி தீக்காயங்களுடன் குற்றுயிரும் குலையிருமாக கிடப்பதாக தகவல் வந்தது.
அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சூரஜ்குமாரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காகி ஐஎன்எஸ் அஸ்வினி ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சுமார் 90 சதவீத தீக்காயங்களுன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சூரஜ்குமார் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாலுமி சூரஜ் இறந்தது தொடர்பாக மகாராட்டிரா, கவுல்வாத் காவல் நிலைய போலீசார் 34, 364 (கடத்தல்), 302 (கொலை), 392 (வழிப்பறி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய மாலுமி சென்னையில் இருந்து சுமார் 1,500 கிலோ மீட்டர் துாரம் கடத்தி வந்து மகாராட்டிரா பால்கார் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை கடத்தி தீ வைத்து எரித்துக் கொன்ற நபர்களை அடையாளம் காண்பதற்காக போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கவுல்வாத் போலீசாருடன் சென்னை போலீசாரும் இணைந்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் புலனாய்வில் இறங்கியுள்ளனர்.