கடல்சார் பல்கலை பெயரில் போலி நிறுவனம் தொடங்கி வேலை வாங்கித்தருவதாக இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் தனது மனைவி ராணி மற்றும் சிலருடன் கூட்டுச் சேர்ந்து ‘செய்லர்ஸ் மாரிடைம் அகாடமி’ என்ற கடல்சார் பல்கலை பெயரில் போலியான நிறுவனம் ஆரம்பித்துள்ளார். அப்பாவி இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 100 நபர்களுக்கு மேல் லட்சக் கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் வேலை வாங்கித்தராமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமாரிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் ஏமாந்தவர்கள் புகார் அளித்தனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் துணைக்கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணைக்கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதனையடுத்து வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மோகன்தாஸ், ராணி, கார்த்திக், மோகன்ராஜ், பார்த்திபன் ஆகிய 5 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோகன்தாஸ், ராணி ஆகியோர் ஏமாற்றப்பட்ட இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 30 லட்சத்திற்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் ஐந்து பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.