மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழாவில், அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் மார்கழி மாத அஷ்டமி தினமான இன்று, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்ததை எடுத்துரைக்கும் வகையிலான அஷ்டமி சப்பர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும் அம்மனுக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் தேர்களில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள வெளிவீதிகளில் வலம் வந்தனர். இதில் அம்மன் இருக்கும் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றனர்.மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைதிருவிழா தேரோட்டத்தை போல அஷ்டமி சப்பர தேரோட்டமும் மிகவும் பிரசித்திபெற்றது என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் நின்றபடி சிவசிவ என்று கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.