சென்னை மாநகராட்சி பகுதியில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் இறப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், சென்னையில் பெய்த மழையின் காரணமாக 32 பகுதிகளில் மின் இணைப்பு நிறுத்தப்பட்ட நிலையில் அதில் 23 பகுதிகளுக்கு மின் இணைப்பு சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் மின்சார இணைப்பு சீர் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அடுத்த மழைக்காலம் வருவதற்குள் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பில்லர் பெட்டிகளும் ஒரு மீட்டர் அளவு உயரம் உயர்த்தப்பட்டு சீரான மின்சாரம் வினியோகம் வழங்கும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.