ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘ஜெய் பீம்’ பெற்றுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜெய் பீம்’. இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
சூர்யா அந்தப் படத்தை தனது 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்தார். மணிகண்டன், லிஜோ மோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ‘ஜெய் பீம்’ படம் ராசாக்கண்ணு என்பவருக்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
நடிகர் சூர்யா அந்தப் படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். ‘ஜெய் பீம்’ படம் பேசுபொருளாகவும் மாறியது. படத்திற்கு பல அங்கீகாரங்களும் கிடைத்து வருகின்றன.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் அமேசான் பிரைமில் ‘ஜெய் பீம்’ வெளியாகி இந்தியா முழுவதும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ முதலிடம் , மேலும் ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படமாகவும் ‘ஜெய் பீம்’ முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், ‘ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் 12 நிமிட காட்சிகளும் இயக்குநர் ஞானவேல் படம் குறித்து பேசுவதும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் ‘ஜெய் பீம்’ என்பது குறிப்பிடத்தக்கது.