தைப்பூசத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும் பழனி முருகன் கோயில், நடப்பாண்டு குறைந்த அளவிலான பக்தர்களால் வெறிச்சோடி களையிழந்து காணப்படுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். காவடிகளை சுமந்தவாறு, நடைபயணமாக பழனிக்கு வரும் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்றவாறு முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நாளை தைப்பூசத் திருவிழா என்பதால், பழனியில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால், நடப்பாண்டு, பக்தர்களின் வரத்து குறைந்தே காணப்படுகிறது.