பிரபல சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம். இவர் இருதய கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 73.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 800 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவர் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களையும் பாடி உள்ளார். மாணிக்க விநாயகம் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாடகர் மாணிக்க விநாயகத்தின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியமும் சென்றிருந்தார்.
“பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.
அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த வழுவூர் மாணிக்க விநாயகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.