வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கை எந்தவொரு காரணத்திற்காகவும் வேறு தேதிக்கு ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்தநிலையில், ஒருங்கிணைந்த வாதங்களின் தொகுப்பை சில மனுதாரர்கள் இன்னும் அளிக்காததால், விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் வருண் சோப்ரா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி அமர்வு, வழக்கை எந்த ஒரு காரணத்திற்காகவும் வேறு தேதிக்கு ஒத்திவைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. வழக்கின் மனு மற்றும் வாதங்களின் தொகுப்பை தாக்கல் செய்யாதவர்கள் இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.