கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய “அணுவாற்றல் ஒழுங்குமுறை ஆணையம்” அனுமதி வழங்கியுள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. அணு உலையையே முற்று முழுதாக அகற்றவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கும் வகையில், அடுத்தடுத்து அணுக்கழிவு மையங்களை அமைக்க ஒன்றிய அரசு அனுமதித்து வருவதென்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மக்கள் நலத்தையும், மண்ணின் வளத்தையும் நாசப்படுத்தக் கூடிய கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கிய காலம்தொட்டே நாம் தமிழர் கட்சி அதனை கடுமையாக எதிர்த்து வருவதுடன், அணு உலை கழிவுகளை என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பி வந்தது. 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது.
இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றினை 7 வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor -AFR) கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை.
இக்காலகட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகமே மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிட்டு, உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாகத் தமிழ் நிலம் மாறிவிடும். இதனைக் கருத்தில்கொண்டே கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க முடிவு செய்தபோதே அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்தது.
ஆனால் மக்கள் எதிர்ப்பினை துளியும் பொருட்படுத்தாது எதேச்சதிகார போக்குடன் கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைக்கான தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைக்க அனுமதித்தது மத்திய அரசு. நிரந்தர அணுக்கழிவு மையத்தைக் கர்நாடக மாநிலம், கோலாரில் பயன்பாட்டில் இல்லாத பழைய தங்கச் சுரங்கங்களில் அமைப்போம் என்று 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணுவாற்றல் துறை அறிவித்தபோது, அதற்கு அம்மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அம்முயற்சி முற்றாகக் கைவிடப்பட்டது.
நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக் கொள்ளாத நிலையில், எந்த இடத்தில் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பது என்கின்ற எந்த முடிவினையும் இந்திய அணுவாற்றல் துறை இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, எதிர்காலத்தில் கூடங்குளத்தையே நிரந்தர அணுக்கழிவு மையமாக மாற்றும் பேராபத்தும் ஏற்படக்கூடும். மேலும் நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை இந்தியா பெறவில்லை. உலகளாவிய அளவில் அறிவியல் வளர்ச்சி அடைந்த வல்லாதிக்க நாடுகளே அணுக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கும்போது அணுக்கழிவுகளைக் கையாள்வதற்கான அறிவியல் இன்னும் வளராத இந்தியா, தமிழத்தில் அடுத்தடுத்து தற்காலிக அணுக்கழிவு மையங்களை அமைத்து வருவது, நேரடியாகத் தமிழர்கள் மீது மத்திய அரசு தொடுக்கின்ற சூழலியல் போரேயாகும்.
ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, அணுக்கழிவு மையம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத்திட்டங்களையெல்லாம் தமிழ் நாட்டின் மீது திணிப்பதன் மூலம் இந்தியாவின் குப்பைத்தொட்டியாகத் தமிழ்நாடு பயன்படுத்தப்படுகிறது என்கின்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் குமுறல்களாக வெளிப்படுகிறது.
ஆகவே , கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணுக்கழிவு மையம் அமைக்கின்ற முயற்சியினை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ஐந்து மற்றும் ஆறாவது அணு உலை விரிவாக்கக் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும் ஒன்றிய அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள எண்ணிக்கை பலத்தினைப் பயன்படுத்திக் தமிழகத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய கூடங்குளம் அணு உலையினை நிரந்தரமாக மூட வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.