தமிழ்நாட்டில் 12 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து இந்த மாதம் திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வல்லுநர் குழுவின் கூட்டம் வாரம் இருமுறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று 200 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர், தஞ்சாவூர், கோவை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த திருப்பணிகள் முடிவுற்று இந்த மாதம் திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.