ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச போட்டியில் அறிமுகமாகி உள்ளார். இதேபோல் ஷர்துல் தாகூரும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். சிட்னி போன்று கான்பெர்ரா மைதானமும் முழுமையாக பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பதால் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கு இதுவரை நடந்துள்ள 9 ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணியும், கடைசி 7 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான இலக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி விவரம்: ஷிகர் தவான், ஷுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், பும்ரா, டி.நடராஜன்.