கிரிக்கெட் அணிகளை வழிநடத்தவே பிறந்தவர் “ரஹானே” – பாராட்டிய இயன் சேப்பல்

கேப்டன் பதவியில் ரஹானே செயல்படும் விதத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டி உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் பகல்இரவாக நடந்த முதல் டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியை தழுவியது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபிறகு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பினார்.

அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், இந்தியா வந்துவிட்டார். இதனால் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையிலான இந்திய அணி மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் ரஹானே செயல்படும் விதத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது. 

மெல்போர்ன் டெஸ்டில் கேப்டனாக அசத்திய ரஹானே இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்ததில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் 2017-ல் தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.

அவர் இந்திய அணியை வழிநடத்த பிறந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். அந்த டெஸ்டில் வார்னர், சுமித் ஜோடி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது அறிமுக சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவை பந்துவீச அழைத்தார்.

இது அவரது துணிச்சலான முடிவு. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த 2 டெஸ்ட்களிலும் ஜடேஜாவின் பங்கு அதிகம் இருப்பதை கவனிக்க வேண்டும். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. தலைமை பண்புக்கே உரிய குணத்துடன் அணியை வழிநடத்தி செல்லும் துணிச்சல் மிக்கவர் ரஹானே. நெருக்கடியான நேரத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். சக வீரர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். இவை இரண்டும் அவரிடம் உள்ள சிறந்த தலைமை பண்பாக கருதுகிறேன்.

 

 

Translate »
error: Content is protected !!