ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி 23 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார். விரைவாக 12 ஆயிரம் ரன்களை கடந்து, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் 309 ஒருநாள் போட்டிகளில் (300 இன்னிங்ஸ்) விளையாடி 12,000 ரன்களை கடந்திருந்தார். விராட் கோலி இந்த இலக்கை 251-வது போட்டியில் (242 இன்னிங்ஸ்) எட்டினார். 12 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் வரிசையில் கோலி, சச்சினைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் (323 போட்டிகள்) உள்ளார். சங்ககாரா (359 போட்டிகள்) நான்காவது இடத்திலும், சனத் ஜெயசூர்யா (390 போட்டிகள்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.