சி.எஸ்.கே-வுக்கு சோதனைமேல் சோதனை! காயம் காரணமாக பிராவோ விலகல்…

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னொரு சோதனையாக, அந்த அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், துபாயில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஐ.பி.எல். தொடரில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி, தொடர் வெற்றிகளை கண்டு ராஜநடை போட்டு வந்தது. ஆனால இம்முறை அந்த அணி பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது.

ஆரம்பத்திலேயே, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் விலகினார். வேறுசில வீரர்களுக்கு கொரோனா அறிகுறி தென்படவே, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த சோதனைகளுக்கு மத்தியில் நடந்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணி சோபிக்கத் தவறியது.

இதுவரை நடந்த 10 போட்டிகளில் 3இல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்நிலையில், காயத்தால் அவதிப்பட்டு வந்த சி.எஸ்.கே.வின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளதாக அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுவதுமாக விலகுகிறார். ஓரிரு நாட்களில் சொந்த நாட்டுக்கு செல்வார் என்று, அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!