சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விலகியது ஏன்?

மும்பை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தன்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸில் 2018 சீசனுக்கு முன்னதாக ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

3 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய அவர் 2020 ஆம் ஆண்டு அணியில் அங்கம் வகித்திருந்தாலும், தனிப்பட்ட காரணங்களைக் கூறி போட்டிகளில் இருந்து விலகினார். ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-–ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்தது.

மேலும் 8 அணிகளுக்கான வீரர்களைத் தேர்வு செய்வதற்கான சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கான அதிகபட்ச வரம்பாக ஒவ்வொரு அணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட ரூ. 85 கோடி, நடப்பாண்டு உயா்த்தப்படாது என்று ஐபிஎல் போட்டியின் தலைவா் பிரிஜேஷ் படேல் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஹர்பஜன் சிங் விலகுவதவாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கூறியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான என்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அணிக்காக விளையாடியது அற்புதமான அனுபவம், அருமையான நினைவுகள்.

இதனால் எனக்குக் கிடைத்த நண்பர்களை எப்போதும் நினைவில் கொள்வேன். அற்புதமான இரண்டு ஆண்டுகளை அளித்ததற்காக சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். அந்த அணியில் ரூ. 2 கோடிக்குத் தேர்வான ஹர்பஜன், கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!