* பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘ஹஜ்ரத் கஃபு (ரழி) அவர்கள் மரண தருவாயில் இருந்த போது உம்மு பிஷ்ரு (ரழி) என்ற பெண்மணி (கஃபு (ரழி) அவர்களின் அருகே இருந்து கொண்டு), ‘‘அப்துர் ரஹ்மானின் தந்தை அவர்களே! (தாங்கள் மரணித்து கபுரில் அடக்கம் செய்யப்பட பின்) இன்ன ஆளை சந்தித்தால் குறிப்பாக அவருக்கு எனது ஸலாமைச் சொல்லுங்கள்’’ என்று கூறினார்கள். (ஆதார நூல்கள்– இப்னுமாஜா – 1449, மிஷ்காத் – 1631)
* ‘‘நான் ஸைய்யதுனா ஜாபிர் (ரழி) அவர்களின் சமூகத்திற்கு சென்றேன். அப்போது அவர்கள் மரணத் தறுவாயில் இருந்தார்கள். நான் அவர்களிடம், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு எனது ஸலாமைச் சொல்லி விடுங்கள்’’ என்று கூறினேன். (முஹம்மது இப்னுல் முன்கதிர் (ரழி) (நூல்கள் – மிஷ்காத் 1633, இப்னுமாஜா 1450)
* நாயகம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும்’’. (அறிவிப்பவர் – அனஸ் (ரழி) (ஸஹீஹுல் புகாரி 1338, ஸஹிஹ் முஸ்லிம் 5115)
* (பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங்கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்த) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள். ‘‘இறந்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?’’ என அவர்களிடம் கேட்கப்பட்டதும், ‘‘அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர். ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’’ எனக் கூறினார்கள். (இப்னு உமர் (ரழி), ஸஹிஹுல் புகாரி – 1370)
* நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு ஜனாஸா (சந்தாக்கில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அது நல் அமல்கள் செய்த மைய்யித்தாக இருந்தால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும்”. அது நற்செயல்கள் செய்யாத (மைய்யித்) தாக இருந்தால் “கை சேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இந்த சப்தத்தை மனிதனைத் தவிரவுள்ள அனைத்தும் செவிமடுக்கும். மனிதன் செவிமெடுத்தால் மயங்கி விழுந்து விடுவான்.’’ (அபூசயீதுல்குத்ரீ (ரழி), ஸஹிஹுல் புகாரி – 1316)