மீண்டும் வெளுத்து வாங்கப்போகும் மழை… 24, 25ம் தேதிகளில் பெய்யும் என எச்சரிக்கை!

சில நாள் ஓய்வுக்கு பிறகு வரும் தமிழகத்தில் மீண்டும் மழை தலைகாட்டப் போகிறது. வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில்கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த வாரத்தில் மழை பெய்து குளிர்வித்தது. எனினும் கடந்த சில நாட்களாக, மழை சற்று ஓய்வெடுத்துள்ளது. இந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 23ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, இன்றே உருவாகியுள்ளது. சென்னையிலிருந்து 1200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் இது நிலை கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

இந்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், அரபிக் கடலிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.

எனவே, வரும் 24, 25ம் தேதிகளில் காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீனவர்கள் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!