வேளாண் சட்டத்தால் விலை உயரும்… எச்சரிக்கிறார் மு.க. ஸ்டாலின்

வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் மழையால், வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நாசமடைந்துள்ளது; வரத்து தடைபட்டுள்ளதால், காய்கறி மற்றும் வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென்று அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை சதம் கடந்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், வெங்காயம் விலை தாறுமாறாக ஏறியிருப்பது குறித்து தனது டுவிட்டர் பதிவின் மூலம் எச்சரித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: வெங்காயம் கிலோ ரூ.130! நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், #OnionPrice-ஆல் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு!

வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்! வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு மண்டல நிர்வாகிகளுடன், ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர் பாலு மற்றும் மாநில நிர்வாகிகள், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 156 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு தற்போது உள்ள கூட்டணி தொடர வேண்டும் என்று கொங்கு மண்டல நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!