அலி ரழியல்லாஹ் அன்ஹூ அவர்களது ஈகைக்கு அல்லாஹ் வழங்கிய அழகிய பரிசு

ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா நாயகி ரழியல்லலாஹூத்தஆலா அன்ஹூ அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள் வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள்.

 

குடும்பத்தில் பசி பட்டினியைப் பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புது துணியொன்றை தனது அருமைக் கணவர் ஹஜ்ரத் அலி (ரழி) அவர்களிடம் கொடுத்து, ‘‘இத்துணியை விற்றுப் பணம் கொண்டு வாருங்கள்’’ என்று சொன்னார்கள். மனைவி கொடுத்த துணியை அலி (ரழி) அவர்கள் கடைத் தெருவுக்கு கொண்டுபோய் ஆறு திர்ஹம்களுக்கு விற்றார்கள். ஆனால் அந்த ஆறு திர்ஹம்களையும் வாங்கி வரும் பொழுது சில ஏழைகள் ஹஜ்ரத் அலி (ரழி)யிடம், ‘‘ஏதாவது தாருங்கள்’’ என்று கேட்ட போது அப்படியே தர்மம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

வழியில் ஒரு மனிதர் ஒரு ஒட்டகத்தை பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
ஹஜ்ரத் அலி (ரழி) அவர்களைப் பார்த்தவுடன், ‘‘அபுல் ஹஸன் அவர்களே! இந்த ஒட்டகத்தை வாங்கிக் கொள்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள். ‘‘இந்த ஒட்டகத்தை வாங்க என்னிடம் பணம் இல்லையே’’ என்று ஹஜ்ரத் அலி (ரழி) சொன்னபோது, ‘‘பரவாயில்லை, இதனை தவணை முறையில் உமக்கு விற்பனை செய்கிறேன். பணத்தைப் பிறகு தரலாம். அது பற்றி கவலை இல்லை’’ என்றார்.

உடனே நூறு திர்ஹம்கள் விலை பேசி அந்த ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். சிறிது தூரம்தான் சென்றிருப்பார்கள். மற்றொரு அரபி அங்கு வந்து, ‘‘அபுல் ஹஸன் அவர்களே, இந்த ஒட்டகத்தை விற்பனை செய்கின்றீர்களா?’’ என்று வினவினார். ஆச்சரியப்பட்ட அலி (ரழி) அவர்கள், ‘‘இதை நான் நூறு திர்ஹம்களுக்கு வாங்கினேன். நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?’’ என்று கேட்டார்கள். ‘‘அப்படியா, நான் இந்த ஒட்டகத்தை 160 திர்ஹம்களுக்கு வாங்கிக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.

சரி என சம்மதித்து, ஒட்டகத்தை ஒப்படைத்து 160 திர்ஹம்களை அலி (ரழி) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். சிறிது தூரம் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது முதலில் ஒட்டகத்தை தவணை முறையில் கொடுத்தவர் அங்கு வந்தார். ‘‘அபுல் ஹஸன் அவர்களே ஒட்டகத்தை விற்பனை செய்து விட்டீரா?’’ என்று வினவினார். ‘ஆம்’ என அலி (ரலி) அவர்கள் கூறியதும், ‘‘அப்படியானால் வாக்குப்படி எனக்கு சேர வேண்டிய நூறு திர்ஹம்களைக் கொடுத்து விடுங்கள்’’ என்று கேட்டார். உடனே ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் நூறு திர்ஹம்களை கொடுத்து விட்டு மீதி 60 திர்ஹம்களை எடுத்துக் கொண்டு போய் தனது அன்பு மனைவி பாத்திமா (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள்.

ஆச்சரியப்பட்ட பாத்திமா (ரலி) அவர்கள், ‘‘நான் கொடுத்த துணிக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைக்கும்? இவ்வளவு பணம் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று வினவினார்கள். ‘‘உங்கள் துணியை ஆறு திர்ஹம்களுக்குத்தான் விற்றேன். அதை அல்லாஹ்வுக்காக வியாபாரம் செய்தேன். அவன் ஒன்றுக்குப் பத்து மடங்கு இலாபமாகப் பெருக்கி 60 திர்ஹம்களை நமக்குத் தந்தான்’’ என்று கூறி நடந்த நிகழ்ச்சியை சொல்லிக் காட்டினார்கள்.

பாத்திமா (ரழி) அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனே அலி (ரழி) அவர்கள் அருமை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள். இதைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘‘அலியே உம்மிடம் ஒட்டகத்தை விற்றது யார் தெரியுமா? அவர்கள் ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) ஆவார்கள். உம்மிடமிருந்து ஒட்டகத்தை வாங்கியது யார் தெரியுமா? ஹஜ்ரத் மீக்காயீல் (அலை) ஆவார்கள். இன்னும் கேட்டுக்கொள்ளுங்கள் அந்த ஒட்டகம்தான் கியாமத் நாளில் சொர்க்கத்தில் பாத்திமா (ரலி) அவர்களின் வாகனமாகும்’’ என கூறினார்கள்.

மேலும் அவர்கள் அலியை நோக்கி, ‘‘அலியே எவருக்கும் கொடுக்கப்படாத மூன்று சிறப்புகளை அல்லாஹ் உமக்கு வழங்கி உள்ளான்’’. முதலாவது, உம்முடைய மனைவி பாத்திமா சுவனப் பெண்களின் தலைவி. இரண்டாவது, உம்முடைய இரண்டு மக்கள் ஹஸன், ஹுஸைன் (ரழி) சுவனத்து வாலிபர்களுக்கு தலைவர்கள். மூன்றாவது, உம்முடைய மாமனார் ரசூல்மார்களுக்கெல்லாம் தலைவர். ஆகையால் உமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பாக்கியங்களுக்கு அல்லாஹ்வுக்கு நன்றியுடையவராக நீர் இருந்து வருவீராக’’ என்று மொழிந்தார்கள்.

(நபிமார்கள் வரலாற்று நுால்களில் இருந்து)

Translate »
error: Content is protected !!