ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்த இந்தியா அணி

இந்தியாஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் போட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ ரூ. 5 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்– – இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து

இந்தியா–  ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன்படி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் 1-–1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக 4வது டெஸ்ட் போட்டி திகழ்ந்தது.

இந்தியா –- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் அறிமுக பவுலர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கி 75.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் அடித்தது. இந்திய வீரர் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் அடித்து 33 ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினார். 1.5 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் 4வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 10 பந்துகளில் 5 ரன்களும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

5வது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. 8.2 ஓவரில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்ற ரோகித் சர்மா (21 பந்துகளில் 7 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய புஜாராசுப்மன் கில் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கினர். சுப்மன் கில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து இந்தியாவின் வெற்றிக்கை வழிவகுத்தார். 47.6வது ஓவரில் 146 பந்துகளில் 91 ரன் அடித்த சுப்மன் கில் நாதன் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் களம் இறங்கிய கேப்டன் ரஹானே 22 பந்துகளில் 24 ரன் அடித்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேற ரிஷப் பண்ட் களம் இறங்கி புஜாராவுடன் இணைந்து ரன் அடிக்கும் முயற்சியில் இறங்கினார்.

நிதானமாக அடி அரை சதம் அடித்த புஜாரா 80.2வது ஓவரில் 211 பந்துகளில் 56 ரன் அடித்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின் களம் இறங்கிய மயங்க் அகர்வால், ரிஷ்ப் பண்ட்டுடன் இணைந்து ரன் அடிக்கத் தொடங்கினார்.

85வது ஓவரில் தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன் அடித்தது. ரிஷ்ப் பண்ட் 102 பந்துகளில் 52 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 11 பந்துகளில் 9 ரன்களும் அடித்து அவுட்டாகாமல் இருந்தனர். மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் 86.4வது ஓவரில் 15 பந்துகளில் 9 ரன் அடித்த மயங்க் அகர்வால் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கி ரிஷப் பண்ட்டுடன் இணைந்தார். இந்தியா வெற்றி பெற 36 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் 95.5வது ஓவரில் 29 பந்துகளில் 22 ரன் அடித்த வாஷிங்டன் சுந்தர் நாதன் லயன் பந்து வீச்சில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய தாக்கூர் 3 பந்துகளில் 2 ரன் அடித்த நிலையில் ஹேசில்வுட் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் களம் சைனி களம் இறங்கினார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பண்ட் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். 97வது ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன் அடித்து வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் 89 ரன்களும், சைனி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2–1 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ரஹானே தலைமையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றியை தழுவி வருகிறது. மேலும் 4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, ஜடேஜா, விஹாரி, அஸ்வின் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

பிரிஸ்பேன் மைதானத்தில் 1951ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 236 ரன்கள் இலக்கை எட்டியதை இந்த மைதானத்தின் அதிகபட்ச இலக்காக இருந்தது. 70 ஆண்டுகளுக்கு பின் 328 ரன் இலக்கை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் (பிசிசிஐ) கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் ரூ. 5 கோடி பரிசு வழங்குவதாகவும் பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!