இங்கிலாந்து – இந்திய 2வது நாள் டெஸ்ட் போட்டி துவக்கம்

அமதாபாத்,

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் 2வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று 1 –-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா– – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ்வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். தொடக்கத்திலிருந்தே இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்கள் தடுமாற்றம் அடைந்தனர். 48.4 ஓவர்களில் 112 ரன்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் 4-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். அதே சமயம் கடந்த 35 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக அவர்களின் மோசமான ஸ்கோராகவும் பதிவானது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 38 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பகல்இரவு டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் 2-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அஸ்வினுக்கு 3 விக்கெட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்கத்தில் தடுமாற்றம் அடைந்தனர்.

27-வது பந்தில் தான் சுப்மான் கில் 11 ரன்னில் (51 பந்து) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இணைந்து ரன் எடுக்க முயன்றனர். ஆனால் அந்த கூட்டணியும் உடைந்தது. 27 ரன் எடுத்த கோலி (58 பந்து, 3 பவுண்டரி) அவுட்டானார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும் (82 பந்து, 9 பவுண்டரி), ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு இன்னும் 13 ரன்களே உள்ளது. எனவே இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இன்றைய 2 வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறது.

 

Translate »
error: Content is protected !!