ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. டி20 போட்டியில் இந்தியா கோப்பையை பெற்றது.
அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரில் 2–1 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ‘வெற்றி கோட்டை’ என்று அழைக்கப்படும் பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இந்திய அணி முதல்முறையாக வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது. இதற்கு முன்பு இந்திய அணி இங்கு ஆடிய 6 டெஸ்டில் 5-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டிருந்தது.
இந்த மைதானத்தில் வெற்றிக்கனியை பறித்த முதல் ஆசிய அணி இந்தியா தான். ஆஸ்திரேலிய அணி 1988-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது கடந்த 32 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வந்தது.
தற்போது இந்தியா அந்த சாதனையை முறியடித்துள்ளது. இந்நிலையில் 4 டெஸ்ட் போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:
இந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட ஒன்று, ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இது சிறப்பு வாய்ந்த டெஸ்ட் தொடராக இருந்தது, இறுதியில் எப்போதும் ஒரு வெற்றியாளர் அல்லது தோல்வியுற்றவர் இருக்கிறார். இன்று டெஸ்ட் கிரிக்கெட் தான் வெற்றியாளர். இந்திய வீரர்கள் மிகச்சிறந்தவர்கள். அடிலெய்ட் தோல்விக்குப் பின்னர் ஏற்பட்ட சண்டை குறிப்பிடத்தக்கதாக இல்லை. குறிப்பாக பும்ரா மற்றும் ஜடேஜா போன்ற பெரிய வீரர்கள் காயத்தால் அவதிகுள்ளான பின்பும் இந்த வெற்றியை இந்திய அணி பெற்றது ஆச்சரியமானது.
ரிஷப் பந்தின் ஆட்டம் உண்மையில் ஹெடிங்லேயில் பென் ஸ்டோக்ஸை எனக்கு நினைவூட்டியது. புதிய நட்சத்திரங்களான சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை இந்தியா உருவாக்கியுள்ளது. நாங்கள் மூன்று நாட்களில் வென்ற முதல் டெஸ்ட் போட்டியின் பின்னரும் இந்திய வீரர்கள் சிறப்பாக போராடி வென்றனர் என அவர் தெரிவித்தார்.