சிட்னி,
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும், முதல் இரண்டு ஆட்டங்களில் பந்து வீச்சு எடுபடவில்லை. 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு அவரது பந்து வீச்சும் ஒரு காரணமாக இருந்தது.
துல்லியமான ‘யார்க்கர்’ பந்து வீச்சு மூலம் தூள் கிளப்பி வரும் நடராஜன் அந்த ஆட்டம் முதல் தொடர்ச்சியாக அணியில் இடத்தை உறுதியாக பிடித்து வருவதுடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பலத்தையும் அதிகரித்துள்ளார். முதலாவது 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் 2-வது போட்டியில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் அசத்தலான வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக விசுவரூபம் எடுத்து வரும் நடராஜனின் தாக்கம் இன்றைய ஆட்டத்திலும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தமட்டில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முதலாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ‘ஹெல்மெட்’டில் பந்து தாக்கியதால் தலையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகனான மிளிர்ந்தார். ஆனால் கடந்த ஆட்டத்தில் அவர் ஒரு விக்கெட் கைப்பற்றினாலும், 51 ரன்களை விட்டுக்கொடுக்க நேர்ந்தது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விக்கெட் இன்றி 48 ரன்களை வாரி வழங்கினார். இதனை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். வெற்றி உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த போட்டியை இந்திய அணி அணுகும் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டியில் வீறுநடை போட்டது போல் 20 ஓவர் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியாமல் திணறி வருகிறது. அந்த அணிக்கு காயம் பிரச்சினையும் பெருத்த தலைவலியாக இருந்து வருகிறது. டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர் ஆகியோர் காயம் காரணமாக விலகி இருக்கும் நிலையில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் குடும்ப உறுப்பினருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் அவரை கவனிக்கும் பொருட்டு அணியில் இருந்து விலகி வீடு திரும்பி இருக்கிறார். அவர் அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணிக்கு திரும்புவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.