இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (நவம்பர் 27) நடைபெறுகிறது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கொரொனாவின் தாக்கத்தால் கடந்த பல மாதங்களாக இந்திய அணி எந்த கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. கடந்த மார்ச் மாதம், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
எனினும், துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் பல அணிகளாக பங்கேற்று விளையாடினர். அதன் பிறகு இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று (நவம்பர் 27) நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக சிட்னியில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி காலை 9:10 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில், முக்கிய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதில் ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஒருநாள் போட்டியில் விராட் கோலி கேப்டனாக உள்ள நிலையில், ஸ்ரேயாஸ், ஷிகர் தவான், மயங் அகர்வால், மணிஷ் பாண்டே, கில், பாண்டியா, ஜடேஜா, கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் எனப் பேட்டிங்கிலும், குல்திப் யாதவ், முகம்மது ஷமி, சைனி, தக்கூர், சஹல், பும்ரா என பவுலிங்கிலும் காத்திருக்கிறார்கள்.
தோனி ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி ஆடும் முதல் போட்டி இது. எட்டு மாதங்களுக்கு பிறகு நடக்கும் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.