இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 50 லட்சத்தை தாண்டியுள்ளது.பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில பத்தாயிரங்களில் உள்ளது. தினமும் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதும் தொற்றில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தவாறே இருக்கிறது. தீவிர பரிசோதனை, வேகமான கண்டறிதல், தரமான சிகிச்சை போன்ற தாரக மந்திரத்தை இந்தியா பின்பற்றி வருவதால் இந்த குணமடைதல் சாத்தியமாகி இருக்கிறது.
அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 74,893 பேர் புதிதாக தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 16 ஆயிரத்து 520 ஆக உயர்ந்திருக்கிறது. இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.தற்போதைய நிலையில் 9 லட்சத்து 62 ஆயிரத்து 640 பேர் மட்டுமே வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் உள்ளனர். அந்த வகையில் சிகிச்சையில் இருப்போரை விட 5 மடங்குக்கு அதிகமான குணமடைந்தவர் எண்ணிக்கையை இந்தியா பெற்றிருக்கிறது.இந்த நிலையில் மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 82 ஆயிரத்து 170 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்து 74 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களில் 79 சதவீதம் பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் மராட்டியம் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய நோயாளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 9 ஆயிரத்துக்கு அதிகமான பாதிக்கப்பட்டவர்களுடன் கர்நாடகம் 2-ம் இடத்தை பெற்றிருக்கிறது.