இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்களில், பூண்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகக்கூறி, தமிழக மீனவர்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது.

அத்துடன், பூண்டிராஜனின் படகில் இருந்தவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், சுரேஷ் (38) என்பவர் காயமடைந்தார். இதையடுத்து தமிழக மீனவர்கள், அவசர அவசரமாக கரைக்கு திருப்பினர். இன்று அதிகாலை மீனவர்கள் ராமேசுவரத்திற்கு கரை திரும்பியதும் சுரேஷை சக மீனவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடுக்கடலில் நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களது படகை கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சுரேஷ் காயமடைந்தார். தாக்குதலுக்கு அஞ்சி நாங்கள் கரைக்கு திரும்பிவிட்டோம்” என்றனர். இச்சம்பவம் இராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையின் செயலுக்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!