வரும் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தலைவர்களும், தங்கள் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில் பங்களித்ததற்காக, நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வேட்புமனுவை அபுதாபி மகுட இளவரசர் முகமது பின் சயீதுடன் நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள் சமர்ப்பித்ததாக, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் 15 அன்று, இஸ்ரேல், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிடையே சமாதான உடன்படிக்கைகளின் அடித்தளத்தை அமைப்பதற்காக வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமை தாங்கினார்.
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் 2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.