எம்ஜிஆரிடம் சிக்கிய வெங்கடசுப்ரமணியன்

தமிழக கல்வித் துறையை ஆட்டிப்படைத்த டாக்டர் வி வேங்கட சுப்பிரமணியம்  எம்ஜிஆரை சீண்டிப் பார்த்தார். சரிவைச் சந்தித்தார். அது தொடர்பான ஒரு அம்சத்தை அவரின் மறைவு நாளில் (30-12-2020) அசைபோட்டுப் பார்த்துக்கொள்கிறேன்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழகக் கல்வித்துறை இயக்குனராக வேங்கடசுப்பிரமணியன் இருந்தார். எந்த விழாவில் அவர் மேடை ஏறினாலும் அரங்கினரை வசீகரிக்கக் கூடிய அளவுக்கு வளமான வார்த்தைகளைப் போட்டு விளாசித் தள்ளும் வல்லமை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் படைத்தவர். பேச்சு வீச்சு நாயகர் என்று கூட அவரைக் குறிப்பிடலாம்.

அந்த காலகட்டத்தில் எம் வி ராமையா என்ற ஆந்திராவைச்  சேர்ந்த ஒரு தொழிலதிபர் தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தார். எப்படியோ அவருக்கு வேங்கட சுப்பிரமணியனுடன் நேச நெருக்கம் உண்டாயிற்று. இருவருக்குமிடையிலான பற்று முற்றியதால் எம்வி ராமைய்யாவின் ஒரு வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து விட்டார்.

தமிழக முதல்வர் எம்ஜிஆரை வைத்து ஒரு விழா நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பலமுறை முட்டிமோதிப் பார்த்துவிட்டேன். அவரின் தேதியே கிடைக்கவில்லை. நீங்கள் உதவ வேண்டுமே!” என  எம்வி இராமையா வேண்டினார்.

உடனே துள்ளிக் குதித்த வெங்கடசுப்ரமனியன், “அதற்கென்ன.. தேதி வாங்கிடலாம்என்றார். முயன்று பார்த்தார். எம்வி ராமய்யா நடத்தும் நிகழ்ச்சி என்பதைக் கேள்விப்பட்டதும் எம்ஜிஆர் தேதி கொடுக்க மறுத்துவிட்டார்.

ஆனாலும் விடவில்லை வேங்கடசுப்ரமனியன்எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற முனைப்பு காட்டுகிற பழக்கமுள்ளவர் ஆயிற்றேநேரே ஆர் வெங்கட்ராமனைச்  சந்தித்தார். ஏற்கனவே காஞ்சி சங்கர மடத்தில் இருவரிடையே நல்ல புரிதல் உண்டு. அவர் மூலமாக எம்ஜிஆருக்கு அழுத்தம் கொடுத்தார்.

ஆர் வெங்கட்ராமன் மீது அளப்பரிய அன்பு கொண்டவர் எம்ஜிஆர். அவரின்  வேண்டுகோளைத் தட்ட முடியாமல் எம்வி ராமையாவுக்குத் தேதி கொடுத்து விட்டார். கலைவாணர் அரங்கத்தில் விழா நடந்தது. தினமலர் செய்தியாளனாக நான் செய்தியாளர் மடத்தில் அமர்ந்து இருந்தேன்.

விழாவில் ஒரு தொகுப்பாளரைப் போலவே மைக் பிடித்துப் பேசினார் வெங்கி. அவரின் ஒவ்வொரு உரையின் போதும் எம்வி ராமைய்யாவின் மீதான புகழ்மொழிகள் தூக்கலாகவே தென்பட்டன. எம்ஜிஆரை மேடையில் வைத்துக்கொண்டு எம்வி ராமையாவை, “வள்ளலே, உத்தமரே, சத்தியரே…” என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.

 எம்ஜிஆரின் உச்சபட்ச புகழுக்குப் பொருந்தி வருமா?

ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வேங்கட சுப்பிரமணியனின் பேச்சைச் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார் எம்ஜிஆர். எம்வி ராமையாவை அளவுக்கு அதிகமாக வேங்கடசுப்பிரமணியன் புகழ்ந்து பேசத் தொடங்கியதும் அவரின்  உரையின் மீது தீவிரம் காட்டத் தொடங்கினார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் உரை நிகழ்த்த வேண்டிய நேரம் வந்தது. எம்ஜிஆரும் மைக் பிடித்தார். ராமையாவைப் பற்றி மணியன் பாராட்டுரைகளை நான் செவியுற்றேன். மிக்க மகிழ்ச்சி. இவ்வளவு திறமை வாய்ந்த ஒரு வள்ளலை ஏற்றியும் போற்றியும் பேசி இருக்கிறார் என்பது என் கவனத்தில் அமர்ந்திருக்கிறது

இவ்வளவு நேசம் கொண்டவரை… ஆற்றல் மிக்கவரை நாம் சாதாரண பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பொறுப்பில் தானே வைத்திருக்கிறோம். அதைவிட நல்ல இடத்தில் அல்லவா அவரை நாம் உட்கார வைத்து இருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். விரைவில் அதற்கான முடிவு எடுக்கப்படும்” என்று பேசிவிட்டு அடுத்த கருத்துக்களைக் கூறினார்.

என் அபிமானத்துக்குரியவரின்  வேண்டுகோள் காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன். வந்த பின் தான் பல உண்மைகள் எனக்குத் தெரிய வந்திருக்கின்றன.” – அவர் சூசகம் கலந்த வாசகம் பேசியவாறு தனது உரையை நிறைவு செய்தார்.

செய்தியாளர்களாகிய நாங்கள் அப்போதே ஒரு முடிவு செய்து விட்டோம். “வேங்கடசுப்பிரமணியனுக்கு ஆப்பு  தான்” என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு செய்தி எழுதுவதற்காக  அலுவலகத்துக்குச் சென்றேன். எம்ஜிஆரின் உரையை நான் எழுதிக்கொண்டிருந்தேன். அபபோது… பிடிஐ செய்தி நிறுவனத்தில் இருந்து ஒரு செய்தி எங்களுக்கு வந்தது. 

“டாக்டர் வேங்கட சுப்பிரமணியம் பணி மாற்றல் செய்யப்பட்டு, திட்டக் குழு உறுப்பினராகப் பணியமர்த்தப் படுகிறார்” என்பதுதான் அந்த செய்தி. வேங்கடசுப்பிரமணியனின் பணிக் கால  வாழ்க்கையில் அவர் சந்தித்த முதல் சரிவு இது மட்டும்தான். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த வரையிலும் சுப்பிரமணியன் மீண்டும் தலை தூக்கவே முடியவில்லை.

வேங்கடசுப்ரமனியன் எந்த இடத்தில் இருந்தாலும் அதன் மதிப்பைப் பெருக்கிக் காட்டி அந்த புகழுக்குள் திளைத்துக் கிடைப்பதில் சமர்த்தர். அதைத்தான் அவர் அந்த  பதவியிலும் காட்டினார். தனது பதவிக்காலம் முடிந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு நேரே டெல்லிக்குச் சென்றார். ஆர் வெங்கட்ராமனுடன் நெருக்கம் காட்டினார். அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி அவரின் இதயத்தில் இடம் பிடித்தார்.

அப்புறமென்ன…? கேட்டதெல்லாம் தான் கிடைத்து விடுமே!

தமிழகத்தில் திட்டக் குழு உறுப்பினர் பதவியில் அவர் இருந்த பணி அனுபவத்தையே முன்வைத்து, மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினராகப் பதவியைப் பெற்றுக் கொண்டார். அது அப்படி ஒன்றும் செல்வாக்கு மிக்கது அல்ல. ஆனாலும்  பொதுவெளியில் பரபரப்பாக பேசக்கூடிய அளவுக்கான வளமிக்க பதவிதான் என்பதாக  ஒரு மாய பிம்பத்தை உண்டாக்கி, அதில் அவர் லயித்துக் கொண்டே இருந்தார்.

அவர் கல்வித் துறையில் நீண்டகாலம் பணியாற்றியதை வைத்து, மத்திய திட்டக் குழு உறுப்பினருக்குரிய பணி இலாக்காக்களாகக் கல்வி உட்பட பல இலாகாக்கள் வழங்கப்பட்டன. மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யக்கூடிய, செய்து வைத்த கல்வி மற்றும் இதர  திட்டங்களைத் தொகுத்து எடுத்தார்.  செய்திக்கு உரியவையாகச் சீரமைத்தார்.

புது டெல்லியிலும் சென்னையிலுமாக பத்திரிக்கையாளர்கள் கூட்டங்கள் நடத்தி, அவற்றில் அமைச்சருக்கு உரிய அந்தஸ்தோடு அந்தந்த துறை சார்ந்த பல திட்டங்களை அறிவித்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி பத்திரிக்கைகளும் பெரிது பெரிதாக அந்த செய்திகளை  வெளியிட்டன.  அந்த சமயத்தில் எம்ஜிஆர் உயிரோடு இல்லை.

இந்த நிலையில்தான் அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் காரணமாக வாஜ்பாய் இந்திய பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பார்த்தார் வேங்கட சுப்பிரமணியன்… பல்வேறு செல் வாக்காளர்களைப் பிடித்து  நேரே வாஜ்பாயை நெருங்கி விட்டார்.

ஆர் வெங்கட்ராமனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியது பற்றி அவரிடம் உருக்கமாகக் குறிப்பிட்டு, அவரின் இதயத்தையும் கவர்ந்து விட்டார். அடுத்தது என்ன?

வாஜ்பாய் தொடர்பான ஒரு நூலை அவர் வெளியிட்டார்.  பிரதமருடனான இந்த நெருக்கத்தைக் காட்டி, அரசியல் மற்றும் அரசு வட்டாரத்தில் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டார்.

திட்டக் குழு உறுப்பினர் என்ற பதவியிலிருந்து கூட ஒருவர் சாதனை பிம்பத்தில் தன் வாழ்க்கையை வாகைப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் வெங்கடசுப்ரமனியன் மட்டுமே.

தினமலர் குடும்பத்தோடு அவருக்கு நெருக்கம் உண்டு. திருநெல்வேலியில் உள்ள தினமலர் அலுவலகத்தையொட்டி சுப்பிரமணியனின் வீடும் இருந்தது. அந்த வீடு விற்பனைக்கு வந்த போது, “யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன்.

ஆனால் தினமலருக்கு மட்டும் விற்கவே மாட்டேன்” என்று கூறிய படி, வேறு மனிதருக்கு தான் விற்பனையும் செய்தார். ஆனாலும் வேங்கட சுப்ரமணியனின் இறுதிக்காலம் வரை தினமலர் ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து அவருடன் நெருக்கம் காட்டி, மதிப்பும் மரியாதையும் கொண்டு நடத்தினார்.

அதற்கான பல வேலைகளை என்னிடம் கூறி, நான்தான் அந்தப் பணிகளைச் செய்து முடித்தேன். வேங்கடசுப்பிரமணியன் மறைவெய்தியபோது ஆசிரியர்  கேட்டுக்கொண்டதன்படி, நான் அவரை அழைத்துச் சென்றேன். நாங்கள் வேங்கடசுப்ரமனியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்.

Translate »
error: Content is protected !!