சென்னை,
எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி வரும் 17 ந் தேதி அன்று அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்குகிறார்கள்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர். சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு அண்ணா தி.மு.க.வினரை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
அண்ணா தி.மு.க. நிறுவன தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாளான 17 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்து இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான 17 ந் தேதியன்று, எம்.ஜி.ஆருடைய நினைவுகளை எப்பொழுதும் நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆருடைய உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17 ந் தேதி அன்று ஆங்காங்கே எம்.ஜி.ஆருடைய உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.