தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடரும் என்று நம்புவதாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் (எல்.டி.டி.இ) இயக்கத்திற்கு இலங்கை, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன. இதற்கிடையே, லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் நேற்று அளித்த தீர்ப்பில், விடுதலை புலிகள் மீதான இங்கிலாந்து அரசின் தடை நீட்டிப்புக்கு சரியான காரணங்கள் இல்லை என்று கூறி, தடையை நீக்குவதாக அறிவித்தது.
இந்த நிலையில், விடுதலை புலிகள் மீதான நீதிமன்ற தீர்ப்பு குறித்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை புலிகளை வீழ்த்தி அதன் கொடூரமான தீவிரவாத செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை.
ஆனால், விடுதலை புலிகள் பயங்கரவாதத்தின் மிச்சங்கள். எந்தவொரு நாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அதன் மீதான தடையை இங்கிலாந்து அரசு அப்படியே தொடரும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சம், வன்முறைகளை தூண்டவும், நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு உட்படுத்துவதற்கும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்போதும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் செயல்பாடுகளால், இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இங்கிலாந்து ஆணையத்தின் தீர்ப்பை இலங்கையில் உள்ள பல்வேறு தமிழ் தலைவர்களும், அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.