ஒவைசி – தினகரன் கூட்டணி யாருக்கு சாதகமாக இருக்கும்..?

சென்னை,

அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்த பிறகு டிடிவி தினகரன், ஐதராபாத் எம்.பி.,யும் ஏஐஎம்ஐஎம்., கட்சியின் தலைவருமான ஒவைசியுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி தமிழக தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்த பிறகு அதிமுகவிற்கு உரிமை கோருவார், இது அதிமுக தலைமைக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்கள் அமைதியாக இருந்த சசிகலா, பிறகு தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது.

சசிகலாவின் இந்த திடீர் முடிவால் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தவிர வேறு யாருடனும் கூட்டணி அமைக்க முடியாத நிலை தினகரனுக்கு ஏற்பட்டது. ஆனால் அதிமுக.,வை எதிர்க்கும் கமல், தினகரனை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்தது. அதே சமயம், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மனிதநேய மக்கள் கட்சியும் ஒவேசியை தங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றின.

2016 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாணியம்பாடி போட்டியிட்ட ஒவைசி கட்சி 10,000 க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றது. 25 சதவீதம் முஸ்லிம்களை கொண்டது வாணியம்பாடி தொகுதி. இதே போல் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்கே நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்டு தினகரன் வென்றார். ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் இவர்கள் இருவரும் தோல்வி அடைந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்க முடியாது என தினகரன்ஒவைசி இருவருக்கும் தெரியும். இருந்தும் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிட ஒவைசியும், எவ்வளவு அதிகமான இடங்களில் போட்டியிட முடியுமோ அத்தனை இடங்களில் போட்டியிட தினகரனும் முடிவு செய்துள்ளனர். பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், ஒவைசிதினகரன் கூட்டணியால் முஸ்லிம் ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது.

கடையநல்லூர், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மத்தியியில் சில இடங்களிலும், வட மாவட்டங்கள் சில வற்றில் மனிதநேய மக்கள் கட்சியும் பலமான கட்சிகளாக உள்ளன. இதே போல் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சி நாகபட்டினத்தில் பலமானதாக திகழ்கிறது.

பெரும்பாலான முஸ்லிம் ஓட்டுக்களை தங்களிடம் வைத்துள்ள இக்கட்சிகள் கடந்த காலங்களில் அதிமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்துள்ளன. தற்போது மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் இக்கட்சிகள் எதிராகவே உள்ளன. இந்த நிலைப்பாடு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்தே முஸ்லிம் கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது.

ஒவைசிதினகரன் கூட்டணியால் திமுக எதிர்ப்பு முஸ்லிம்களின் ஓட்டுக்கள் பிரியும். முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்தை முக்கிய அம்சமாக வைத்து ஒவைசி செய்யும் பிரசாரம் திமுக கூட்டணியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவைசியின் பிரசாரம் திமுகவிற்கு எதிராக இருக்கும் என்பதாலும், தினகரனை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதாலும் ஒவைசிதினகரன் பிரிக்கும் ஓட்டுக்கள் அதிமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும்.

Translate »
error: Content is protected !!